மயான வழக்கு; மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்துத் தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (அக். 23) விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்துத் தரப்பினரும் மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மரணம் அடைந்த பிறகும் கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், இப்படிப்பட்ட மோசமான நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும் வேதனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்துத் தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதைத் தடுப்பவர்களுக்கு எதிராகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்வோம் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in