

இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற்றும் 75 படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, துரதிர்ஷ்டவசமாக தொய்வின்றி தொடர்கிறது. இந்த கைது மற்றும் சிறைப்பிடிக்கும் சம்பவங்கள், தமிழக மீனவர்களின் மத்தியில் அமைதியின்மையையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையில் இருந்து கடந்த 1-ம் தேதி மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரத்தில் சென்ற 4 பேர் மற்றும், கோடியக்கரையில் இருந்து 2-ம் தேதி சென்ற 4 பேரும், 3-ம் தேதி (நேற்று) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
பாக் ஜலசந்தியில் வரலாற்று ரீதியாக தங்களுக்கு உரிமையுள்ள இடத்தில், தங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலை மட்டுமே தமிழக மீனவர்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே, இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை தொடர்பாகவும், 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கையெழுத்தான இந்திய- இலங்கை ஒப்பந்தங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
தற்போது, பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மத்தியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, சூரை மீன்பிடி படகுகள் வாங்க, மானிய உதவி அளிக்கப்படுகிறது. ரூ.ஆயிரத்து 520 கோடி நிதித் தொகுப்பு, ஆழ்கடல் பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த 2014 ஜூன் 3-ம் தேதி, 2015 ஆகஸ்ட் 7-ம் தேதி அளித்த மனுவிலும் தெரிவித்திருந்தேன். இது தெடார்பான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும்.
மேலும், இலங்கை அரசு மீனவர்களை விடுவித்தாலும், அவர்களது படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் விடுவிப்பதில்லை. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. நீண்ட காலமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள், வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த படகுகளை மீட்டு, அவற்றை விரைவில் சீரமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, இலங்கை அதிகாரிகளுடன் பேச வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேணடும். கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்கள், 73 படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.