Published : 01 Mar 2016 02:51 PM
Last Updated : 01 Mar 2016 02:51 PM

ரூ.10 கோடியில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ரூ.10 கோடி செலவில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "ரூ.10 கோடி செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் அடைய இயலும் என்பதால் உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை பலரும் மேற்கொள்கின்றனர்.

அனைவராலும் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் கட்டணம் செலுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இயலாது.

எனவே, முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என்றும், முழு உடல் பரிசோதனைக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 28.8.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, முன்னோடித் திட்டமாக, 10 கோடி ரூபாய் செலவில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்:

இந்தத் திட்டத்தில் முழு ரத்தம், சிறுநீரகம், ரத்த சர்க்கரை, ரத்தக் கொழுப்பு, கல்லீரல் செயல்பாடு, ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். ஆகிய பரிசோதனைகள், நெஞ்சு சுருள் படம், நெஞ்சு ஊடுகதிர் படம், மிகையொலி, இதய மீள் ஒலி, தைராய்டு ரத்தம், மற்றும் சிறப்பு சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும்.

அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை:

அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில், மேற்கண்ட அனைத்து பரிசோதனைகளுடன் கூடுதலாக கருப்பை முகைப் பரிசோதனை, மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்பட பரிசோதனை, எலும்பு திறனாய்வு பரிசோதனை, ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பாரா தைராய்டு ஹாய்மோன் பரிசோதனை ஆகியவைகள் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் மூன்று விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்; அம்மா கோல்ட் பரிசோதனைக்கு 1,000 ரூபாயும், அம்மா டைமண்ட் பரிசோதனைக்கு 2,000 ரூபாயும், அம்மா பிளாட்டினம் பரிசோதனைக்கு 3,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அம்மா ஆரோக்கியத் திட்டம்:

மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வாரத்தில் இரு நாட்கள் பொதுமக்கள் சென்று, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்தம், இ.சி.ஜி. கொலஸ்ட்ரால், கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணமில்லாமல் செய்து கொள்ளும் வகையில் ‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’ என்ற திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x