Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளை திமுக கைப்பற்றியது: 10 ஒன்றியங்களில் திமுக வெற்றி; ஓர் ஒன்றியத்தை அதிமுக பிடித்தது

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டஊராட்சி குழுத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் 10 ஒன்றியங்களில் திமுகவும், ஓர் ஒன்றியத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றன. 2 ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் கிராம துணைத் தலைவர்களை தேர்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த படப்பை மனோகரன், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நித்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மலர்கொடி, துணைத் தலைவராக திவ்யபிரியா, உத்திரமேரூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச்சேர்ந்த ஹேமலதா, துணைத் தலைவராக வசந்தி, பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கருணாநிதி, துணைத்தலைவராக மாலதி, குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி, துணைத் தலைவராக உமா மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாலாஜாபாத் ஒன்றியக் குழுவுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன. இதில் திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும், அதிமுக 5, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று நினைத்தனர். திமுக சார்பில் கருணாநிதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து சுயேச்சையாக வெற்றி பெற்ற பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் களமிறங்கினார். இருவருக்கும் தலா 8 வாக்குகள் விழுந்தன. இறுதியில் குலுக்கல் முறையில் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக செம்பருத்தி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக காயத்திரிதேர்வு செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஆர்.டி.அரசும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பச்சையப்பனும் தேர்வு செய்ப்பட்டனர்.

திருப்போரூர் ஒன்றியக் குழுத்தலைவராக திமுகவைச் சேர்ந்த இதயவர்மனும், துணைத் தலைவராக சத்யாவும் வெற்றி பெற்றனர். சித்தாமூரில் திமுகவைச் சேர்ந்த ஏழுமலை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அச்சிறுப்பாக்கத்தில் திமுகவைச் சேர்ந்த கண்ணன் தலைவராகவும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த உதயா கருணாகரன், துணைத் தலைவராக ஆராவமுதன், புனித தோமையார் மலை ஒன்றியக்குழு தலைவராக சங்கீதா, துணைத் தலைவராக பிரசாத் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுராந்தகத்தில் அதிமுகவைச் சேர்ந்த கீதா தலைவராகவும், துணைத் தலைவராக குமாரவேலும் வெற்றி பெற்றனர். லத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x