Published : 18 Jun 2014 08:55 AM
Last Updated : 18 Jun 2014 08:55 AM

திரையுலகினரை முட்டித்தள்ளும் கழகமா திமுக?

திமுக மீதான ஈர்ப்பில் நடிகர், நடிகை கள் அக்கட்சியில் சேர்வதும் பின்னர் மனம் வெறுத்து விலகுவதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் குஷ்பு. குறுகிய காலத்திலேயே ஸ்டார் பேச்சாளராக உயர்ந்த அவர், ‘தாங்க முடியாத மனஅழுத்தம் காரணமாக’ விலகியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை குஷ்பு. திமுகவில் 2010-ம் ஆண்டு சேர்ந்த குஷ்பு, அக்கட்சியின் நட்சத் திர பேச்சாளராக திகழ்ந்தார். திமுகவின் பல்வேறு கூட்டங்களி லும் பங்கேற்று திமுகவுக்கு ஆதர வாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண் டார். திமுக நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவந்தார். சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளில் பங்கேற்று வாழ்த்து தெரி வித்தார்.

இந்நிலையில், திமுகவில் இருந்து திடீரென விலகிய குஷ்பு, திமுக தலைவர் கருணாநிதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். கோஷ்டிப் பிரச்சினை, மாவட்ட செயலாளர்கள் சிலரது ஆதிக்கம் போன்ற பிரச்சினைகள் காரண மாக திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டுவரும் நிலையில், குஷ்பு விலகியிருப்பதும், கட்சியில் தனது பணிகளை மேற்கொள்ளும்போது தாங்க முடியாத மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறியிருப்பதும் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பொதுவாக திமுகவில் சினிமா நட்சத்திரங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே திரையுலகினர் பயன்படுத்தப் படுகின்றனர். அவர்களது உழைப்புக்கேற்ற நிர்வாகப் பதவிகள் கொடுப்பதில்லை’ என்று பரவலாகவே கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் திமுகவில் சேர்ந்து பணியாற்றிய சரத்குமார், டி.ராஜேந்தர், ஜே.கே.ரித்தீஷ் போன்றோர் பின்னர் பல்வேறு பிரச்சினைகளால் வெளியேறினர். இதில் சரத்குமார், டி.ராஜேந்தர் ஆகியோர் தனியாக கட்சி தொடங்கினர். கடந்த காலங்களில் ராதாரவி, தியாகு, மறைந்த நடிகர்கள் எஸ்.எஸ்.சந்திரன், உள்ளிட்டோரும் இதே வரிசையில் திமுக உறுப்பினர்களாக இருந்து பின்னர் வெளியேறியவர்கள்தான்.

2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரது திரையுலகப் பயணத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இதனால் திமுக ஆதரவு என்ற நிலையில் இருந்து விலகினார்.

சினிமா துறையினரின் செல்வாக்கை தங்களது கட்சி யின் வளர்ச்சிக்காக பயன்படுத் திக்கொண்ட பிறகு, அவர்களை அரசியல் கட்சிகள் கைவிட்டுவிடுவ தாக நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். மத்திய அமைச்சராக இருந்த நடிகர் நெப்போலியனும். கே.பாக்யராஜும் சமீபகாலமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

கட்சிக்காக உழைத்த நடிகர்கள் பின்னர் மனம் வெறுத்து விலகுவது என்ற நிலை பல காலமாக திமுகவில் நீடித்துவருகிறது. அந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் குஷ்பு. காலம் காலமாக நீடிக்கும் இந்த நிலைக்கான உண்மைக் காரணங்கள் என்ன? கட்சித் தலைமைக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் உள்கட்சி விவகாரங்களை சரிசெய்ய முயற்சிக்கவில்லையா? திரை யுலகினருக்கும் திமுகவுக்குமே வெளிச்சம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x