பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு ரத்து செய்யக்கூடாது: அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு ரத்து செய்யக்கூடாது: அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்துக்கான உதவி முகாம் அலுவலர் பணிக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு பின்னர் ரத்து செய்யக்கூடாது என்று அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பி.நடராஜன் ஆகியோர் அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உதவி முகாம் அலுவலர் முதல் அனைத்து நிலை தேர்வுப் பணிகளுக்கும் பணியாளர்கள் நியமிப்பதற்குரிய அறிவுரைகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு சரியாக வழங்கி தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாத வகையில் நடைபெற உதவுமாறு வேண்டுகிறோம்.

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு உதவி முகாம் அலுவலராக நியமிக்கப்பட்டு பிப்ரவரி 29-ம் தேதி அன்று தாம்பரத்தில் தேர்வுத் துறையால் நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்துகொண்ட சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ராமச்சந்திரனின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, ஆசிரியர்களுக்கு தேவையற்ற மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவ ருக்கு மீண்டும் உதவி முகாம் அலு வலர் பணி ஆணை வழங்குமாறும், இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வுப் பணிகள் மாணவர்களின் நலன் கருதி அமைதியாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் நடக்கும் வகையில் எந்தவித பாரபட்சமும், ஏற்றத்தாழ்வும் இன்றி நடத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in