

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் அதிமுக தொண்டர்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
’’சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் இல்லத்திலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும், அதிமுகவின் மீதும், தொடாந்து கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஆற்றி வரும் செயல்வீரர் இளங்கோவனின் கட்சி செயல்பாடுகளை முடக்கும் வகையில், அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு திமுக அரசால் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, அவற்றைச் சாதனைகளாக்கி வெற்றி நடை போடும் மாபெரும் மக்கள் பேரியக்கமாகும்.
இதனை அழிக்க நினைக்கும் திமுக அரசின் தொடர் முயற்சிகள், அதிமுக உண்மைத் தொண்டர்களின் நல்லாசியோடு முறியடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.