புதுச்சேரி முழுக்க மீண்டும் ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டும்: மத்தியக் குழுவிடம் அதிகாரிகள் வலியுறுத்தல்

மத்தியக் குழு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய குடிமைப் பொருள் வழங்கல் துறைச் செயலர் உதயகுமார்.
மத்தியக் குழு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய குடிமைப் பொருள் வழங்கல் துறைச் செயலர் உதயகுமார்.
Updated on
1 min read

புதுச்சேரி முழுக்க மீண்டும் ரேஷன் கடைகளைத் திறக்க மத்தியக் குழுவிடம் குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் முதல்வரை ஆலோசித்து, ரேஷன் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் குறிப்பிட்டார்.

புதுவையில் கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ 35, தனியார் 25 என மொத்தம் 377 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன. இந்தக் கடைகள் மூலம் இலவச அரிசி, தீபாவளிக்கு சர்க்கரை, பொங்கல் பொருட்கள், பேரிடர் கால நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் ஆளுநர்-அமைச்சரவைக்கு இடையிலான மோதலின்போது, அப்போதைய ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கையால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரிசிக்கு பதில் பணம் செலுத்தப்பட்டதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் 42 மாதமாகச் சம்பளமின்றி உள்ளனர். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தது. மத்திய உணவுத்துறை அமைச்சகம், ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிப்பதாக உறுதியளித்தது. ஊதியம் கிடைக்காததால் ரேஷன் கடை ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் மீண்டும் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரி ராஜன் தலைமையில் மத்தியக் குழுவினர் இன்று புதுவைக்கு வந்தனர்.

புதுவையில் செயல்படுத்தப்படும் நேரடி மானியம், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசி திட்டம் குறித்து குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைப் புதுவையில் அமல்படுத்துவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. காரைக்காலில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அரிசி வீணாகிவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்தும் மத்திய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். புதுவை அதிகாரிகள் இலவச அரிசி, மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் நேரடியாகப் பயனாளிகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ரேஷன் கடைகள் திறக்கப்படுமா என்று அமைச்சர் சாய் சரவணக்குமாரிடம் கேட்டதற்கு, "ரேஷன் கடைகளைத் திறந்து பொருட்கள் தர உரிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய ஆய்வுக் குழுவிடமும் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் முதல்வருடன் ஆலோசித்து ரேஷன் கடைகளைத் திறப்போம். ரேஷனில் அரிசி, சர்க்கரை தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தரும் திட்டமுள்ளது" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in