Published : 22 Oct 2021 06:26 PM
Last Updated : 22 Oct 2021 06:26 PM

உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை; தற்போது நிலை என்ன? - மனம் திறந்த பாரதி பாஸ்கர்

தனது உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை என்ன, தற்போதைய நிலை என்ன என்பதை பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறி, மீண்டு வந்துள்ளார் பாரதி பாஸ்கர். தனது உடல்நிலைக்கு என்ன ஆனது என்பதை பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பாரதி பாஸ்கர்.

அதில் பாரதி பாஸ்கர் பேசியிருப்பதாவது:

"நான் உடல்நிலை தேறி வருகிறேன். எனக்கு நேர்ந்த உடல்நலக் குறைவால் சுமார் 22 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வீட்டிற்கு வந்து தேறி வருகிறேன். பழைய தெம்புடன் மேடையேறி உங்களைச் சந்திக்கும் நாளை உங்களைப் போலவே நானும் ஆர்வத்துடன், ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். அனைவரையும் சந்திக்கவும், தொலைபேசியில் பேசவும் இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்.

அனைவரும் மதங்களைக் கடந்து எனக்காகப் பிரார்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு எப்படி நான் நன்றி சொல்ல முடியும். பலர் வீடுகளில் குடும்பத்தினரோடு பிரார்த்தனை, கோயில்களில் பிரார்த்தனை செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. உங்களுக்காக நான் எதுவுமே செய்ததில்லையே. தமிழில் உங்களோடு நான் பேசியிருக்கிறேன். அந்தத் தமிழ் உருவாக்கியிருக்கும் பந்தத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

முதல்வர் தொடங்கி எத்தனையோ பெரிய நபர்கள் ஏதேனும் உதவி வேண்டுமா என விசாரித்தார்கள். நேரடிக் கண்காணிப்பு கிடைக்க உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய கணவர்தான் மிகச்சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது பின்தலையில் யாரோ தட்டுவது போன்று இருந்தது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிறு கசிவு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் யோசிப்போமா என்ன? ஏதோ சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை, தலைவலி என்றுதானே யோசிப்போம். படுத்து எழுந்திருந்தால் சரியாகிவிடும் என்று சொல்லித்தான் வீட்டிற்கு வந்தேன்.

ஆனால், என்னுடைய கணவர்தான் பிடிவாதமாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குப் போனது ரொம்பப் பெரிய உதவியாக இருந்தது. குடும்பத்தினர், பேச்சாளர் குடும்பத்தினர், பாப்பையா சார், ராஜா சார், கல்யாணமாலை மோகன் சார், இசைக்கவி ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

எத்தனையோ பேர் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்துள்ளீர்கள். நான் என்ன உங்களுக்குச் செய்துவிட முடியும். உங்களுடைய அன்பு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. கடவுள் வாழ்க்கையில் 2-வது வாய்ப்பு கொடுக்கும்போது, வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கிறது. மருத்துவருடைய கருணையினாலும், தெய்வத்தின் அளவற்ற அன்பினாலும் , எண்ணற்றவர்களின் பிரார்த்தனையினாலும், குடும்பத்தினரின் கவனிப்பாலும்தான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

முழுமையாகத் தேறிவிட்டேன் என்று சொல்லக்கூடிய கட்டத்துக்கு இன்னும் வரவில்லை. இன்னும் கொஞ்சம் நாளாகும். முழுமையாக உடல்நலம் தேறி வார்த்தைகளில் பழைய சக்தியோடு மேடைக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கோயில்களில் வந்த பிரசாதங்கள் எங்கள் வீட்டில் மலை போல் குவிந்தன. அந்தக் கடவுளின் அளவற்ற கருணை என்னை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

கடவுள் எனக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன். இது எனக்கு இன்னொரு வாய்ப்பு. இரண்டாவது இன்னிங்ஸ் என்பது ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இருக்கும். ஒருவேளை என் பேச்சு மற்றும் எழுத்தின் மூலமாக இன்னும் நிறைய செய்ய வேண்டும் என கடவுள் எனக்குச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதாகத்தான் என் பயணம் இனிமேல் இருக்கும்.

உங்கள் அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி என்ற சின்ன வார்த்தையைத் தாண்டி நான் வேறு என்ன சொல்லிவிட முடியும். திரும்பவும் சந்திப்போம். நன்றி".

இவ்வாறு பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x