Published : 22 Oct 2021 06:20 PM
Last Updated : 22 Oct 2021 06:20 PM

பிரியாணி சாப்பிட்டதால் சிறுமி உயிரிழப்பு: ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமீன்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி லோசினியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாகக் கூறியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 7 ஸ்டார் பிரியாணி கடையில், துந்தரீகம்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், தன் மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோருடன் செப்டம்பர் 8ஆம் தேதி பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றைச் சாப்பிட்டு, வீடு திரும்பிய நிலையில், அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி லோசினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆரணி நகர காவல் நிலையத்தில் தாய் பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில், பதிவான வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் செப்டம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று (அக். 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் உணவகத்தைத் தரமாகப் பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவு காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, 40 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில் கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x