

போதை, மனநோயை ஏற்படுத்தும் மருந்துகள் மக்களுக்கு சுலபமாகக் கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியதாக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெயராமன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
''போதை மருந்துகளால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதை மற்றும் மனநோயை உண்டாக்கும் மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதைத் தடுக்க வேண்டும். மருந்து, மாத்திரைகளை மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும்.
இதனால், சட்ட விதிகளைப் பின்பற்றுமாறும் அனைத்து மருந்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மருத்துவக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் மருந்துக் கடைகளில் அடிக்கடி சோதனை நடத்தி, மருந்து, மாத்திரைகள் மருத்துவ ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் 90 நாள் சிறையில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது''.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.