Published : 22 Oct 2021 05:46 PM
Last Updated : 22 Oct 2021 05:46 PM

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: இறையன்பு பாராட்டு

சென்னை

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியவரிடம் கொடுத்த தூய்மைப் பணியாளரைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பாராட்டி, கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்த கூரியர் ஊழியர் கணேஷ்ராமன் (வயது 36). இவர் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி, ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்குக் கீழ் வைத்திருந்தார்.

இந்நிலையில், அவருடைய மனைவி வீட்டைச் சுத்தம் செய்தபோது அந்த கவரைக் குப்பையில் போட்டுள்ளார். இதையறிந்த கணேஷ்ராமன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது

இதற்கிடையே, குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர், தங்க நாணயம் இருந்த கவரைப் பார்த்துள்ளார். இது குறித்து, தனது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், துாய்மைப் பணியாளர் மேரி கையால் கணேஷ் ராமிடம் தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு நேர்மையாக ஒப்படைத்த மேரிக்குக் காவல் துறையினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவும் பாராட்டி, கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "அன்புள்ள மேரி அவர்களுக்கு,

தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று" என்று இறையன்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x