Published : 22 Oct 2021 05:41 PM
Last Updated : 22 Oct 2021 05:41 PM

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி சூசக பதில்

சென்னை

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 18-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் (அக்.20) வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலையின் புகார் தொடர்பாக ஆதாரம் கேட்டார்.

மின் கொள்முதல் தொடர்பான புகாருக்கு ஆதாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டு கெடு விதிக்க, உடனடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வங்கிகளில் அரசுப் பொறியாளர்களின் கணக்குகளில் திடீரென பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்த விவரங்களை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இதுகுறித்துக் கூறியதாவது:

’’முதல்வர் தலையிலான அரசு நல்லாட்சியினை, மக்களுக்கான ஆட்சியினை நடத்தி வருகிறது. எந்தவித ஆதாரமும் முகாந்திரமும் இல்லாமல் அரசினைக் குற்றம் சொல்லுவது, அரசின் மீது தவறான மாயையை உருவாக்குவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். எந்த இடத்திலாவது தவறு ஏற்பட்டிருப்பின் சரியான ஆதாரத்தை அவர்கள் காண்பித்து தவறை நிரூபிக்கலாம்.

வங்கியில் இருந்து மின்பகிர்மான வட்ட அலுவலகத்திற்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட கணினி எக்சல் சீட்டினைக் காண்பித்து தவறு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது ஏற்புடையதா....? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான மின்சேவையை வழங்க உத்தரவிட்டுள்ளார். மின்சார வாரியம் அதற்கேற்ப பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்கான சேவை செய்வதில் முழுக் கவனத்தையும் திருப்பி, தவறான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல் முதல்வரின் அறிவுரையின்படியும், ஆலோசனையின்படியும் மின்சார வாரியம் சிறப்பான மின் சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் கூறும் குறைகளைச் சரிசெய்து சிறப்பான நிர்வாகத்தை முன்னெடுப்போம். முதல்வரின் ஆசியுடன் மிளிரும் மின்சாரத் துறையாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் இருக்கும்’’.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x