பாலியல் வழக்கு; விசாரணையைத் தாமதப்படுத்த சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்றக் குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி.அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவர் என்பதால், இருவரையும் நீக்கக் கோரி, உள்துறைச் செயலாளருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை தொடங்கி விட்டதாகவும் சிறப்பு டிஜிபி குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி இயற்கை நீதியைப் பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று (அக். 22) நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில், விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை தனக்குத் தரப்படவில்லை என்றும், பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கெனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

கமிட்டியில் உள்ள அருண் என்ற அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையைத் தாமதப்படுத்த சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாகா கமிட்டி விசாரணையில் ஏற்கெனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in