Published : 22 Oct 2021 04:21 PM
Last Updated : 22 Oct 2021 04:21 PM

கோ-ஆப்டெக்ஸில் குழந்தைகளுக்கு ஆர்கானிக் துணி வகைகள்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

ராணிப்பேட்டை

கோ-ஆப்டெக்ஸில் குழந்தைகளுக்கு ரசாயனம் கலக்காத புதிய ரக ஆர்கானிக் துணி வகைகளை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று (அக். 22) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறும்போது, "தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2 மாதத்துக்குள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வரும் 4 மாதங்களில் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ரசாயனம் கலக்காத புதிய துணி வகைகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (அக். 23) தொடங்கி வைக்க உள்ளார். நாங்கள் மானியக் கோரிக்கையில் தெரிவித்த திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல், கோ-ஆப்டெக்ஸில் கிடைக்கும் பட்டு, மற்ற இடங்களில் கிடைக்கும் பட்டுத் துணி வகைகளைக் காட்டிலும் தரம் அதிகம். பட்டின் தரத்தை உறுதிப்படுத்தும் கியாரன்டி அடையாள அட்டையை முதல்வர் நாளை அறிமுகம் செய்துவைக்க உள்ளார். அதில், பட்டில் உள்ள தங்கம், வெள்ளி ஜரிகைகளின் சதவீதம் குறிப்பிடப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சித்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை இலக்கு ரூ.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு விற்பனை நிலையத்துக்கு ரூ.40 லட்சம், அரக்கோணத்துக்கு ரூ.75 லட்சம், சோளிங்கருக்கு ரூ.4 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் (அரசு திட்டம்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x