

அரியலூர் நகரில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி மாணவர்கள் அளித்த மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அக்கடை மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
அரியலூர் நகரில் அண்ணா நகர் பகுதியில் உள்ள பள்ளியின் அருகில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை மாற்றக்கோரி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கும் இளந்தென்றல் என்ற மாணவியும், 4-ம் வகுப்புப் படிக்கும் அவரது தம்பி தமிழரசனும் அண்மையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், அக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி பரிந்துரை செய்ததையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் நேற்று மாலை கடையை வேறு இடத்துக்கு மாற்றியது. இதையடுத்து கடையில் இருந்த அனைத்துப் பொருட்களையும் நேற்று மாலை வாகனம் மூலம் மாற்றுக் கடைக்கு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர்.
பள்ளி மாணவர்கள் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி கடந்த ஆண்டு திமுக சார்பில் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முன்னேற்பாடுகளும் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.