தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 22) வெளியிட்ட அறிவிப்பு:

"குமரிக்கடல் பகுதியை ஒட்டி (1.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் 10 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேலம் மாவட்டம் எடப்பாடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தேனி மாவட்டம் பெரியார், ஈரோடு மாவட்டம் பவானி, கன்னியாகுமரி மாவட்டம் சூரலக்கோடு, திருவாரூர் மாவட்டம் கொடவாசல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஈரோடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in