Published : 22 Oct 2021 01:02 PM
Last Updated : 22 Oct 2021 01:02 PM

சிபிஎஸ்இ தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்துவதா?- அன்புமணி கேள்வி 

சென்னை

10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்துவதா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:

''நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கான தேர்வை சிபிஎஸ்இ அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கான தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல.

பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் எனப் பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல்தான். இதை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x