

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடையவைத்தது.
இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அவர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவரது மரணம் தடுப்பூசி மீதான அச்சத்தை தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை இன்று (ஆக.25) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது,
இந்த நிலையில் விவேக்கின் மரணம் குறித்து, ஆய்வு நடத்திய மத்தியக் குழு தடுப்பூசி காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என்றும் மாராடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்திருக்கிறார் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாகவே விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.