

சிசிடிவி கேமரா பொருத்தாத பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என, அரியலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 1 முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இயக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து, கீழப்பழுவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இன்று (அக் 22) ஆய்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் பெரியசாமி முன்னிலையில் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, அனைத்து பள்ளி வாகனங்களும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து இயக்க வேண்டும், முக்கியமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்தாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என, மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.