Last Updated : 22 Oct, 2021 09:42 AM

 

Published : 22 Oct 2021 09:42 AM
Last Updated : 22 Oct 2021 09:42 AM

நீட் தேர்வு தொடக்கம் அல்ல தொல்லை: கி.வீரமணி பேட்டி

நீட் தேர்வு தொடக்கம் அல்ல தொல்லை என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக இனிவரும் காலங்களில் மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் நீட் தேர்வுக்கு எதிரான புத்தக வெளியீட்டு விழா மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஏற்று மாலை (அக் 21) நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெற்றுகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் வீரமணி, நீட் தேர்வுக்கு எதிராக இனிவரும் காலங்களில் மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும்.

மருத்துவக் கல்விக்கு மட்டும் அல்லாமல் வரக்கூடிய காலங்களில் பட்ட படிப்பு அனைத்திற்கும் நுழைவு தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தமிழகத்தில் அதிமுகவில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனையை பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். யார் யாரால் வந்தார்கள், யார் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசினார்கள் என்பதில்தான் போட்டுக் இருக்கிறதே தவிர ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை. இனிமேலாவது எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள் என எண்ணுகிறேன்.

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை புரிந்தது குறித்து கேட்டபோது, தற்போதாவது தடுப்பூசி போட்டால் தான் கரோனாவை ஒழிக்க முடியும் என்பது பிரதமருக்கு தெரிந்ததில் மகிழ்ச்சி. முதல் அலையின் போது விளக்கேற்றுங்கள், கை தட்டுங்கள், விமானத்திலிருந்து பூக்கள் தூவுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கரோனாவை ஒழிக்க முடியாது என்பது தெரிந்து கொண்டுதான் தடுப்பூசி தான் இதற்கு ஒரே வழி என தெரிந்து கொண்டது மகிழ்ச்சியே.

இந்திய அளவில் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலங்களில் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் உள்ள மாநிலம் தான் தமிழ்நாடு. வருங்காலங்களில் குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிஎம் கேர் நிதியை இவ்வகையான கரோனோ தடுப்பு பணிகளுக்கு பெருமளவில் செலவிட வேண்டும் என்றார் .

விழாவில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்(ஜெயங்கொண்டம்) மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x