Published : 22 Oct 2021 08:37 AM
Last Updated : 22 Oct 2021 08:37 AM

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு

தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131% அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆர்.இளங்கோவன் மகன் பிரவீன் குமார், திருச்சியில் உள்ள கல்வி அறக்கட்டளை ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார். அங்கும் சோதனை நடைபெற்று வருகிரது. அதேபோல் கரூரில் உள்ள இளங்கோவனின் சகோதரி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்:

ஆத்தூர் இளங்கோவன் என்று அதிமுக வட்டாரத்தில் அறியப்படும் ஆர்.இளங்கோவன் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இவர் அதிமுகவின் ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்னர் தான் இவருக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து இளங்கோவன் ரெய்டில் சிக்கியுள்ளார்.

ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன் சோதனை வளையத்துக்குள் வந்துள்ளார்.

அவரது சேலம் வீடு, திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரூரில் உள்ள உறவினர்களின் வீடுகள், சென்னை மற்றும் நாமக்கல் என மொத்தம் 27 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x