Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு- 144 குண்டுகள் முழங்க மரியாதை; டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

சென்னை டிஜிபி வளாகத்தில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து டிஜிபி சைலேந்திர பாபு அஞ்சலி செலுத்தினார்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ‘ஹாட் ஸ்ப்ரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959அக். 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியாவின் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், பணியின்போது மரணம் அடையும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் 2020செப்.1 முதல் 2021 ஆக. 31-ம் தேதிவரையிலான ஓராண்டு காலத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த 377 காவலர்களுக்கு நேற்று வீர வணக்கம் செலுத்தப் பட்டது.

இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழககாவல் துறை தலைமை இயக்குநர்அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து டிஜிபி சைலேந்திர பாபு அஞ்சலி செலுத்தினார்.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்எம்.கே.நாராயணன், அட்மிரல் புனீத்சதா, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, முன்னாள் காவல் துறை இயக்குநர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு சம்பவங்களில் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், டிஜிபி சைலேந்திர பாபு பேசும்போது, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவுகூர்ந்தார். பின்னர் 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க, வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகு,2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிகாரிகள் அனைவரும் கைகளில் கருப்பு ரிப்பன் கட்டியபடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆளுநர் அஞ்சலி

காவலர்களுக்கான வீர வணக்கநாளை முன்னிட்டு, நாட்டை காக்கதங்கள் உயிரைத் தியாகம் செய்தகாவலர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். காவலர்களின் உயர்ந்த தியாகமும், முன்மாதிரியான தைரியமும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்என்று ஆளுநர் தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x