

தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின், தன் அறையில் இருந்தபடியே கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் ‘மின்னணு தகவல் பலகை’ தயாராகி வரு கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. இதுதவிர, தொகுதிகள் தோறும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, துறைகள் தோறும் திட்டங்களின் வளர்ச்சி குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுதவிர, மாவட்டங்கள்தோறும் வளர்ச்சித் திட்டங்களைக்கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்களையும் நியமித்துள்ளார். அத்துடன், அனைத்துத் துறை திட்டங்களையும் தானே நேரடியாகக் கண்காணிக்கும் நடவடிக்கையிலும் முதல்வர் இறங்கியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘‘தேர்தல் வாக்குறுதிகள், சட்டப்பேரவை அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு நம்மிடம் உள்ளது. இவை அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்ற வேண்டும். அடுத்து இருப்பது 6 மாதங்கள் தான். அதன்பின் அடுத்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் அறிவிப்புகளை செயல்படுத்த வேண் டும்.
எனவே, அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன்மூலம் தினசரி நான் பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப் போகிறேன்’’ என்றார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வருக்கான மின்னணு தகவல் பலகை - ‘டேஷ்போர்டு’ தயாராகி வருகிறது. இதற்கான ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட் டுள்ளார்.
இதுகுறித்து மின்னாளுமை முகமை அதிகாரி கூறியதாவது:
முதல்வருக்கான ‘டேஷ் போர்டு’ தயாராகி வருகிறது. வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள்தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரு திட்டத்தை எடுத்தால் அத்திட்டம் தொடங்கப்பட்டது முதல்தற்போது வரையுள்ள புள்ளிவிவரங்கள், நிதி ஒதுக்கீடு, திட்டத்தின் தற்போதைய நிலை, செயல்பாடு உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய முழுமையான மின்னணு தகவல் பலகையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.விரைவில் பணிகள் முழுமை பெறும்.
இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையி்ன் பொறியாளர்கள் மேற்பார்வையாளர்களாகப் பணி யாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிற மாநிலங்களில்...
தமிழகத்தில் இந்த மின்னணு தகவல் பலகை முதல்முறையாக உருவாக்கப்படுகிறது. அதேநேரம், பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரும்பும் திட்டத்தின் செயல்பாடுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த முறையைப் பின்பற்றி, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலப்பிரதேசம், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதல்வருக்கான மின்னணு தகவல் பலகை உள்ளது. இதில், திட்டங்களின் நிலை குறித்துபொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வரின் மின்னணு தகவல் பலகையில் மாநிலத்தில் உள்ளதெருவிளக்குகள் விவரம் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் பார்க்க முடியும்.
ஆனால், தமிழக முதல்வருக்கான மின்னணு தகவல் பலகையைமுதல்வர் மட்டுமே பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.