Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் கிடையாது: கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படாது என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம்குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடந்தகூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் துறை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத் தனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்தன்னார்வலர்களுக்கு சிறப்பூதியம் அளித்தல், பிஎட் பட்டதாரிகள் பங்கேற்க அனுமதி, தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், தொண்டு நிறுவனங்கள் தலையீடு தவிர்த்து மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்குதல் உட்படபல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தனர். தேசிய கல்விக் கொள்கையின் நீட்சியாக உள்ள இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என சில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத் தன.

மேலும், 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு முதல் 2 மாதங்கள் தேர்வு நடத்தக் கூடாது எனவும், பூஜ்ய கலந்தாய்வு முடிவைக் கைவிடவும் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

பின்னர் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் பேசியதாவது:

கரோனா பரவலால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டைச் சரிசெய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம் அமல் செய்யப்படுகிறது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும், ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல்வழங்கப்படும் என்பதில் உண்மையில்லை. இதேபோல், வடமாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்குமேல் பணிபுரியும் ஆசிரியர்கள், விரும்பினால் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப் படும்.

சுமார் 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களை உரிய முறையில் ஆசிரியர்கள் வரவேற்க வேண்டியது அவசியம். குழந்தைகளை உளவியல் ரீதியாக தயார் செய்த பின்னர் பாடங்களை நடத்த வேண்டும். தற்போது ஆசிரியர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x