

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் செயற்கையாக மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதை முறைப்படுத்துவதற்காக சந்தையில், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, அதன் மூலம் சில நிறுவனங்களுக்கு உயிர் ஊட்டும் பணியை கடந்த 5 மாதங்களாக செய்து வருகின்றனர். அனல் மின்நிலையப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர்களின் பில்களை 3 மாதமாக கிடப்பில் போட்டு, அதனை வழங்க 4 சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ், அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினால், இதற்கான ஆதாரம் கிடைக்கும். இதுபற்றி செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தால், என்னிடம் உள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையே இல்லை என்றும், தமிழகம் எப்போதும் யூனிட் 20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கவில்லை என்றும் சொன்ன அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது மற்ற மாநிலங்களும் இதே விலைக்கு வாங்கியுள்ளன என்று சொல்கிறார்.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சில மின் ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு கொடுக்கத் தயாராக உள்ளனர். இதன் மூலம் அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கி விட்டனர். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவதோடு, இதில் கவனம் செலுத்தி, ஊழலுக்கான அஸ்திவாரத்தைக் கலைக்க வேண்டும்.
கரூரில் இருந்து ஈரோடு, கோவை வரை எல்லா தொழிலதிபர்களையும் இப்போதே மிரட்டத் தொடங்கி விட்டனர். கொங்கு பகுதி தொழிலதிபர்களை மிரட்டி, அதன் மூலம் இப்பகுதிக்கு திமுக வந்து விடலாம் என நினைத்தால், அது பகல்கனவு மட்டுமே என்றார்.