

மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ள நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு கட்சியை வலிமை மிக்கதாக அவர் மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘‘என் மகன் துரை அரசியலுக்கு வரமாட்டார்’’ என வைகோ உறுதியாக கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, துரை வைகோவுக்கு கட்சிப் பணியாற்ற வாய்ப்புவழங்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதிமுக தலைமை நிலையச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின்அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை. வைகோ மகனுக்கு கட்சியில் பதவிவழங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
அதுபோல துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி கட்சிக்குள் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், துரை வைகோவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருப்பதாக மதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘வாரிசு அரசியலை எதிர்த்துதான் 1994-ல் மதிமுகவை வைகோ தொடங்கினார். இப்போது அவரதுமகன் அரசியலுக்கு வந்திருப்பதால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர் எதை செய்தாலும் தந்தையுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வார்கள். இவற்றையெல்லாமம் கடந்துதான் அவர் அரசியல் களத்தில் நிற்க வேண்டும்’’ என்றனர்.
கடந்த 1996-ல் மதிமுக சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சிஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும், அக்கட்சிக்குகிடைத்த வாக்கு சதவீதமும், வைகோவின் ஆளுமையும் மதிமுகவை தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக வைத்திருந்தது.
ஆனால், இப்போது மதிமுகவின் நிலை, தனி சின்னத்தில் போட்டியிட முடியாத அளவுக்கு உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மதிமுக ஒரு மக்களவைத் தொகுதியிலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. எனவே, அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டிய மிக முக்கியமான சவால்துரை வைகோவுக்கு காத்திருக்கிறது. இந்த சவால்களை எதிர்கொண்டு தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு மதிமுகவை வலிமைமிக்க கட்சியாக மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.