

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. கடந்த 12-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் சுமார் 27 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆணையம் அறிவுறுத்தல்
ஒருசில இடங்களில் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் பதவியேற்கவில்லை. அவர்கள் இன்று நடைபெறும் மறைமுக தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டு, மறைமுக தேர்தலில் பங்கேற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பதவிக் காலம் தொடங்கும் நாளான அக்டோபர் 20-ம் தேதியில் இருந்து 3 மாதங்களுக்கு உள்ளாகவோ அல்லது 20-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் முதல் 3 கூட்டங்களில் ஒன்றிலோ, இவற்றில் எது முந்தையதோ அதற்குள்ளாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
அசம்பாவிதங்களை தடுக்க..
இதில், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மறைமுக தேர்தலில் தலா 9 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், தலா 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், 2,890-க்கும்மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றதுணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.