Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது: ரூ.99.20 லட்சம் கள்ளநோட்டுகள், கார்கள் பறிமுதல்

கோவையில் இரிடியம் விற்பனை செய்யும் மோசடி கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாத்திரம், கள்ள நோட்டுகள் மற்றும் பொருட்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் இரிடியம் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை அருகேயுள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒருவரதுவீட்டில், ‘இரிடியம்’ விற்பனை செய்யும் மோசடி கும்பல் தங்கியிருப் பதாக செட்டிபாளையம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ தலைமையிலான போலீஸார், அந்த வீட்டில் சோதனை நடத்தி 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற் றும் 2 கார்களை கைப்பற்றினர். இதையடுத்து, பிடிபட்ட நபர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரிடியம் மோசடி தொடர்பாக, ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார் (34), சூர்யாகுமார்(24), திருப்பூரைச்சேர்ந்த ராஜ் என்ற போஜராஜன் (42), கோவையைச் சேர்ந்த முருகேசன்(36), செந்தில் குமார்(41), வெங்கடேஷ் பிரபு (26), ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தேவை உள்ளவர்களை குறிவைத்து இக்கும்பல் மோசடி செய்து வந்துள்ளது. தினேஷ்குமார் இரிடியத்தை ஆய்வு செய்யும் நிபுணர் போலவும், போஜராஜன் இடைத்தரகர் போலவும், முருகேசன் ஆதிவாசி போலவும், மற்றவர்கள் வாங்குபவர், விற்பவர் கள் போலவும் நடித்துள்ளனர்.

இவர்கள் வேறொரு நபர் மூலம்,கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல்கலாம் ஆகியோரை அணுகியுள்ளனர். ‘தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் கலசம் உள்ளது. இதை வாங்குபவர் கையில் பணத்துடன் தயாராக உள்ளார். ஆனால், இரிடியத்தை ஆய்வு செய்ய, போக்குவரத்து செலவு, ஆய்வுக்கான பொருட்கள் வாங்க பணம் இல்லை. நீங்கள் பணம் அளித்தால் பத்து மடங்காக அந்த தொகை திருப்பித் தரப்படும்’ என ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பிய மகரூப், அப்துல்கலாம் ஆகியோர் மூன்று தவணைகளில் ரூ.27 லட்சம் தொகையை அளித்துள்ளனர். பணத்தை பெற்ற கும்பல்,அவர்கள் இருவரையும் நம்ப வைக்க, ரூ.99.20 லட்சத்துக்கு கள்ளநோட்டை அச்சடித்து, அதை நல்லநோட்டு போல காட்டி ஆசையை தூண்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் கும்பலின் மீது, மகரூப்புக்கும், அப்துல்கலாமுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரிடியம் விற்பனைக்கு முறையான ஆவணங்களை கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனே போஜராஜன், தன்னிடம்இருந்த ரூபாய் நோட்டு கட்டுகள் சிலவற்றை இருவரிடமும் கொடுத் துள்ளார். அது கள்ள நோட்டு என்பதையறிந்த மகரூப்பும், அப்துல்கலாமும் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து, அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கொல்ல முயற்சித்தபோது, இருவரும் தப்பி காவல்துறையிடம் புகார் அளித்ததால் இக்கும்பல் சிக்கியது. கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் குறித்தும் விசாரிக்கப் படுகிறது. இக்கும்பல் ரூ.1,500-க்குஒரு பாத்திரத்தை வாங்கி, கருக்கி, அதை இரிடியம் போல காட்டி ஏமாற்றியுள்ளனர். இதுபோன்ற மோசடி நபர்கள்குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x