

புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் மூன்று தலைமுறைகளாக இட்லி வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த இட்லி தற்போது ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
தமிழர்களின் முக்கிய உணவு இட்லி. ஆண்டுதோறும் இட்லி தினம் மார்ச் 30ம் தேதி கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரு ரூபாய் இட்லி அம்மா உணவகத்தில் கிடைக்கிறது. இதேநிலை அனைத்து ஊர்களிலும் இல்லை. கிராமப்பகுதிகளிலும் கூட இட்லி விலை அதிகளவே விற்கப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இட்லியுடன் சாம்பார், சட்னி, இட்லி பொடி ஆகியவற்றை சுடச்சுட வழங்கி வருகிறார் சாந்தி. இந்த இட்லியை சாப்பிடவும், வாங்கி செல்லவும் ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
இட்லி வியாபாரம் செய்யும் சாந்தி கூறும்போது, “மூன்று தலைமுறைகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறோம். ஒரு அணா தொடங்கி தற்போது இட்லி விலை ரூ.1 ஆக விற்கிறோம். இட்லி, சாம்பார், சட்னியுடன் தருகிறோம். அதிக விலை வைத்து விற்க விருப்பமில்லை. எங்களை நாடி ஏராளமானோர் வருவதால் குறைந்த லாபமே போதும் என்பதே எங்கள் எண்ணம்" என்றார்.
சாந்தியின் மகள் ஆனந்தி கூறுகையில், "அப்பா இறந்து விட்டார். எங்கள் பாட்டி காலத்தில் இருந்தே இட்லி விற்பனைதான். எனக்கு விவரம் தெரிந்து இட்லி விலை ஐம்பது பைசாவுக்குதான் விற்று வந்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு ரூபாயாக விலையை மாற்றினோம். எப்படியும் ஐநூறு ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். அதில் குறைந்த அளவு லாபம் வந்தால் போதும் என்பதே எங்கள் விருப்பம். கல்லூரியில் படிப்போர் தொடங்கி செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர் வரை பலரும் எங்கள் கடையில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பள்ளி மாணவர்கள் பலரும் பார்சல் வாங்கி செல்வதுதான் எங்களுக்கு சந்தோஷம்" என்கிறார்.
சந்தையில் அரிசி, உளுந்தை மொத்தமாக வாங்கி பயன்படுத்துவதால் குறைந்த விலைக்கு இட்லியை தர முடிகிறது என்றும் குறிப்பிடுகின்றனர். காலையில் 5.30 மணி தொடங்கி 11 மணி வரை வியாபாரம் சூடுபறக்கிறது. இந்நேரத்துக்குள்ளேயே தயாரான மாவு முழுவதும் இட்லியாகி விடும். நிச்சயம் மாவு மீந்து போனதேயில்லை என்கிறார் சாந்தி.