Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் சார்பில் 13 தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழில் சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் படைப்பாளிகளுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 8-வது ஆண்டாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பேராயம் புரவலரும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

இதில் எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா, இரா.முத்துநாகு ஆகியோருக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது. இதேபோல் பாரதியார் கவிதை விருது - கவிஞர் கடவூர் மணிமாறனுக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - கவிஞர் வெற்றி செழியன், ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது - பேராசிரியர் முனைவர் பழனி அரங்கசாமி, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் தொழில்நுட்ப விருது - விஞ்ஞானி வி.டில்லிபாபு, முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - டிகேஎஸ் கலைவாணன், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - சி.மகேந்திரன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது - சி.மகேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

மேலும் சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - முனைவர் மா.பூங்குன்றனுக்கும், தொல்காப்பிய தமிழ்ச் சங்க விருது - கோ.மா.கோதண்டம், அருணாசலக் கவிராயர் விருது - ஜி.ஆத்மநாதனுக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது. முனைவர் பா.வளனுக்கு பாரிவேந்தர் பைந்தமிழ் விருதும் ரூ.3 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

விருது பெற்றோர் சார்பாக முனைவர் வளன் அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினர். கடந்த முறை விருது வழங்கும் நிகழ்ச்சியில் கருணாநிதி பெயரில் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு கருணாநிதி பெயரில் முத்தழிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது: தமிழை தொழில்நுட்பம் மூலம் உலக அளவில் பரப்ப வேண்டும். இளைஞர்கள் அதற்கு முன்வர வேண்டும். சிறந்த பாரம்பரிய மிக்க தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். கீழடி நாகரிகத்தை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே, இளைய சமுதாயம் கீழடி நாகரிகத்தை உலக அளவில் கொண்டு செல்ல தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் பேசியது அருமை தமிழ் மொழி. ஒதுக்கப்பட்ட மொழியாக இருந்த தமிழ் இன்று செம்மொழி அந்தஸ்துக்கு வந்துள்ளது. பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து போராடியது தமிழ் சமூகம்தான். சமய உலகத்தை காப்பாற்றிய ஒரே மொழி தமிழ்தான். தமிழரின் அனைத்து வீட்டு திண்ணைகளும் ஒரு காலத்தில் விருந்தினர் இல்லங்களாக இருந்தன. இன்று அப்படியில்லை. இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். தமிழை உலகறியச் செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கல்வி உங்களுக்கு அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அன்பையும், மனித நேயத்தையும் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் பாரிவேந்தர் பேசியதாவது: தமிழ் பேராயம் விருது, கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காரணமாக 2 ஆண்டுகள் வழங்கப்படவில்லை. இந்த விருதுகள் சாகித்ய அகாடமி விருது போன்ற பெரிய விருதுகளுக்கு படிக்கட்டுகளாக அமைந்துள்ளன. மாணவர்கள் தங்கள் தாய்மொழி குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ் பேராயத்தின் அப்துல் கலாம் அறிவியல் தொழில்நுட்ப விருது பெற்ற வி.டில்லிபாபு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். `போர்முனை முதல் தெருமுனை வரை', `அடுத்த கலாம்', `விண்ணும் மண்ணும்', 'போர் விமானங்கள் - ஓர் அறிமுகம்' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘எந்திரத் தும்பிகள்’ என்ற நூல் `இந்து தமிழ் திசை' பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இதற்காக இவருக்கு நேற்று விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் புகைப்படம் அடங்கிய தபால் தலை அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x