

சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி நெம்மேலியில் இயங்கி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.காம். (பொது), பி.காம் (கணினி பயன்பாடு), பி.சி.ஏ. ஆகிய பட்டப் படிப்புகள் உள்ளன. முதல் பட்டதாரிகள் இந்த ஆண்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் ஏப்ரல் மாதம் இறுதி ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில் சோழமண்டலம் இன்சூரன்ஸ், ஆன்லைன் சொல்யூசன்ஸ், ஐ.டி.பினிஷிங் ஸ்கூல், ஆரக்கிள் பார்ட்னர் இண்டஸ்ட்ரீஸ், டிஜிட்டரேட் ஆகிய நிறுவனங்கள் நடத்திய கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் இறுதி ஆண்டு மாணவர்கள் 21 பேர் சாப்ட்வேர் இன்ஜினியர், ஹார்டுவேர் நிபுணர், டேட்டேபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர், விற்பனை அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டனர்.
அவர்களில் 3 பேர் பி.ஏ. தமிழ் பட்டதாரிகள், 7 பேர் பி.சி.ஏ., 11 பேர் பி.காம். பட்டதாரிகள் ஆவர். கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வுசெய்யப்பட்ட இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவன துணைத்தலைவர் பிரபு நம்பியப்பன் 8 மாணவர்களுக்கு வேலைக்கான உத்தரவை வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தா.டேவிட் ஜவகர், நெமிலி உறுப்புக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாரம் மேலும் சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வரவுள்ளன“ என்றார்.