

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, புதிய திட்டங்களை அரசு அறிவிக்கக்கூடாது. அரசு நிதியில் சாதனை விளக்க விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்பது போன்ற விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறிய தாவது:
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன. ஒருசில பகுதிகளில் பறக்கும் படையினர் தற்போதே சோதனைப் பணிகளை தொடங்கி விட்டனர். தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் என 234 தொகுதிகளிலும் 7 நாட்களும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, நடத்தை விதிகள் தொடர்பாக 3 புகார்கள் வந்துள்ளன. தூத்துக்குடி பகுதி யில் அரசு திட்டங்களுக்கான டோக்கன் வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதன் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகளை பொறுத்த வரை, அனுமதி பெற்றுத்தான் ஊர் வலம், பிரச்சார கூட்டங்களை நடத்த வேண்டும். அதுவும் ஆன் லைனில் elections.tn.gov.in இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, காவல் துறையில் இருந்தும் தடையில்லா சான்று பெற வேண்டும். நகரப் பகுதிகளில் பொதுமக்கள் பார்வை படும் இடங்களில், சுவர் விளம்பரங் களுக்கு அனுமதி கிடையாது. சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைக்குள் பணிகள் முடியும். ஊரகப் பகுதிகளில் கட்டிட உரிமையாளரின் அனுமதியுடன் விளம்பரம் செய்யலாம்.
தேர்தல் ஊர்வலத்தில் 10 வாகனங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. வேட்புமனு தாக்கலின் போது 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
புதிய திட்டங்களை அரசு அறிவிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை தொடரலாம். தனி மனிதருக்கான திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணை யத்தின் அனுமதி பெற வேண்டும். அரசு நிதியில் இருந்து சாதனை விளக்க விளம்பரங்கள் வெளி யிடுவது தடை செய்யப்படுகிறது. அரசுக்கு சொந்தமான விடுதிகள் போன்றவற்றை அரசியல் கட்சிகள் தனியாக பயன்படுத்த முடியாது. மற்ற கட்சிகளுடன் சமமாக பயன்படுத்த வேண்டும். அவற்றை பிரச்சாரத்துக்கு பயன் படுத்தக்கூடாது. 702 பறக்கும் படைகள், 702 சோதனைச் சாவடிகள் இன்று முதல் செயல்படத் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தேர்தலுக்கு 3 மாதங்கள் இருப்பதால், அரசின் செயல் பாடுகள் அதுவரை முடங்குமா?
அரசின் வழக்கமான செயல்பாடு களுக்கு எந்த தடையும் இல்லை. தனி மனிதர்கள் பயன் பெறும் வகையிலான திட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனு மதியை பெற வேண்டும். அனுமதி கேட்டு எங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். ஆணையம் முடிவெடுக்கும்.
மழை நிவாரணத்துக்கு இன்று வரை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறதே? அது தொடருமா?
வெள்ள நிவாரணம் தொடர்பாக ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. தனி மனிதர் பயன்பெறுவதால் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வழங்க முடியும்.
கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியுமா?
வாக்குப்பதிவு நாளான மே 16-ம் தேதிக்கு 2 நாள் முன்பு வரை, அதாவது மே 14-ம் தேதி வரை வெளியிடலாம்.
அம்மா உணவகம், அம்மா குடிநீரில் முதல்வரின் படங்கள் உள்ளதே. அவை அகற்றப்படுமா?
ஆட்சியில் இருப்பவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என்பது நடத்தை விதிகளில் உள்ள தால், படங்கள் அகற்றப்படுகின்றன.
வியாபாரிகள் பொருட்கள், பணம் அனுப்பப்படுவது பறிமுதல் செய்யப்படுமா?
முந்தைய தேர்தல் வரை, அவற்றை மேல் முறையீடு செய்து திரும்ப பெறமுடியாத நிலை இருந்தது. தற்போது வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் மேல் முறையீடு செய்ய முடியும்.
தனிநபர் எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்?
வேட்பாளர்கள், கட்சியினர், தனி நபர்கள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என எவ்வளவு வேண்டு மானாலும் கொண்டு செல்லலாம். ஆனால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
பறக்கும் படையில் எத்தனை பேர் இருப்பார்கள்? தேர்தல் பணிக்கு எத்தனை அலுவலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்?
பறக்கும் படையில் 2 போலீஸார், 2 வருவாய் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைக்கு ஏற்ப அலுவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தேர்தல் பணியில் தற்போது 3 லட்சத்துக்கும் அதிக மானவர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.