

விதிமுறை மீறி கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடம் தொடர்பாக உண்மையை மறைத்து அறிக்கை தாக்கல் செய்த மாநகராட்சி அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் மதன் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு 2-வது அவென்யூ குடியிருப்பு பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தைச் சுற்றிலும் முறையாக விடவேண்டிய இடைவெளி விடப்படவில்லை. திட்ட அனுமதியை மீறி கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அதை மூடி சீல் வைக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
திட்ட அனுமதியை மீறி அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதை எதிர்த்தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறை மீறல்கள் குறித்து மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைத்து விதிமுறை மீறலே இல்லாதது போல பொய்யான அறிக்கையை தாக்கல் செய்த மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி 3 தினங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.