சேலம் அருகே மேகவெடிப்பு: ஒரே நாளில் கொட்டிய 213 மி.மீ. மழை 

வசிஷ்ட நதியில் வெள்ளம்
வசிஷ்ட நதியில் வெள்ளம்
Updated on
1 min read

ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக, ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தடுப்பணை நிரம்பியது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சேலம், ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் ஒரே நாளில் 100 மி.மீ.க்கும் கூடுதலாக மழை பெய்து வந்தது. ஏற்காட்டில் அவ்வப்போது, கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 11-ம் தேதி 56.8 மி.மீ. மழை பெய்தபோது, மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி மேட்டூரில் ஒரே நாளில் 92.2 மி.மீ. மழை பெய்தது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்றும் சில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் தொடங்கிய கனமழை இரவு 8 மணி வரை நீடித்தது. பலத்த காற்று ஏதுமின்றி, தொடர் கனமழை பெய்தது. பெத்தநாயக்கன் பாளையத்தில் ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அங்குள்ள குளம், குட்டைகள் நிரம்பியதுடன், தென்னங்குடிபாளையம் ஏரியும் நிரம்பியது. மேலும், கனமழை காரணாக, வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூரில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிந்தது.

இதனிடையே, ஒரே நாளில் 213 மி.மீ. மழை பெய்ததை அறிந்த ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா தேவி, பெத்தநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பெத்தநாயக்கன் பாளையம் ஆமணக்கு மற்றும் மரவள்ளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த, மழை மானியையும் ஆய்வு செய்தார். கனமழை பெய்தபோதிலும் பெத்தநாயக்கன் பாளையத்தில் நல்வாய்ப்பாக சேதங்கள் ஏற்படவில்லை.

இதுகுறித்து மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறுகையில், ‘பெத்தநாயக்கன் பாளையத்தில் ஒரே நாளில் 213 மி.மீ. மழை பெய்ததை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. அரிய நிகழ்வான மேகவெடிப்பு காரணமாகவே, பெத்தநாயக்கன் பாளையத்தில் அதி கனமழை பெய்துள்ளது’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in