Published : 21 Oct 2021 05:46 PM
Last Updated : 21 Oct 2021 05:46 PM

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் தொடங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புகள் உள்ளதாகவும், 10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளதாகவும், 130 கோடி மக்கள்தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளதாகவும், 2017-ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், இதனால் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக் கலை படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று (அக். 21) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன எனத் தெரிவித்தனர்.

உடல்நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும், கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர்.

கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x