தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு
Updated on
1 min read

தனியார் மினி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கு முயற்சித்தபோது நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி ஆபீஸ் பின்புறமுள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் இன்று தனது மகளின் திருமணத்திற்காகக் கழுகுமலையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு தனியார் மினி பேருந்தில் சொந்த ஊரான ராமலிங்கபுரத்திற்குப் பயணம் செய்தார்.

பேருந்து நிறுத்தம் வந்ததை அடுத்து, மகேஸ்வரி கீழே இறங்க முயற்சி செய்தார். அப்போது நிலைதடுமாறி, பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டு வழியாகக் கீழே விழுந்தார். விபத்து ஏற்பட்டதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்குள்ளவர்கள் விபத்தில் சிக்கிய மகேஸ்வரியை மீட்டு, குருவிகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார்.

அவர் பேருந்தில் பயணம் செய்தபோது கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்துக் குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in