Last Updated : 21 Oct, 2021 02:21 PM

 

Published : 21 Oct 2021 02:21 PM
Last Updated : 21 Oct 2021 02:21 PM

மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையைக் கண்டித்து 2-வது நாளாக உண்ணாவிரதம்

கோட்டைப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையோரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவர்களின் படகை இடித்து நடுக்கடலில் மூழ்கடித்து, மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கண்டித்து மீனவர்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்டோபர் 18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் சுமார் 17 நாட்டிக்கல் மைல்தொலைவில் மறுநாள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகு மீது இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இவர்களில் சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மாயமாகிய ராஜ்கிரணை நேற்று இலங்கை கடற்படை சடலமாக மீட்டது. இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் ஒப்படைக்க வேண்டும். ராஜ்கிரணின் குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மூழ்கடிக்கப்பட்ட படகுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் தொடராமல் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா (25) உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் சுமார் 280 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பரபரப்புடன் காணப்படவேண்டிய மீன்பிடி இறங்குதளம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வேலை நிறுத்தத்தால் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

"திருமணமாகி 40 நாள்தானே ஆகிறது. பிழைப்பு நடத்த கடலுக்குச் சென்ற என் மகன் கொல்லப்படனுமா?. எங்களுக்கு மீன்பிடித்தலைவிட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாதே. இதைத்தானே கதியென்று நம்பியுள்ளோம். பட்டப்படிப்பு படித்தாலும் கடைசியா இந்தத் தொழிலுக்குத்தானே வரவேண்டி இருக்கு. இலங்கை அரசு செய்தது நியாயமா?" என கண்ணீரோடு மருகமள் பிருந்தாவைக் கட்டி அணைத்தபடி போராட்டக் களத்தில் அழுது புரண்டு வருகிறார் ராஜ்கிரணின் தாயார் ஆரவள்ளி.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் சங்கத்தினர் கூறும்போது, "ராஜ்கிரணின் சடலம் இலங்கை அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு இன்று சர்வதேச எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பிறகு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சிறை பிடிக்கப்பட்டுள்ள இரண்டு மீனவர்களையும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஒருவேளை ஒப்படைக்காவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

போராட்டக் களத்தில் கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x