

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகள் அவர்களின் உறவினர்களை சந்திக்க சலுகையளித்த விவகாரத்தில் சேலம் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அதிமுக பிரமுகர்கள் உள்பட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை 20.10.21 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு போலீஸார் சேலம் திரும்பினர். வரும் வழியில் விதிமுறைகளை மீறி கைதிகளை, அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இது தொடர்பாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.