Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

கரோனா 3-வது அலை ஜனவரி, பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு: தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

கரோனா தொற்றின் 3-வது அலை அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலும், 2-வது அலை கடந்த பிப்ரவரி மாதத்திலும் பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக கடந்த மே மாதம் 21-ம் தேதி 36,184 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் 467 பேர் உயிரிழந்தனர். மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துதல் போன்றவற்றால் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறையத் தொடங்கியது.

இதையடுத்து, பேருந்துகள் இயக்கம், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், திரையரங்குகள் திறப்புஎன ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கேரளாவில்தினசரி பாதிப்பு அதிகரித்ததால் அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தற்போது தமிழகத்தில் 1,200-க்கும் கீழ் தொற்று எண்ணிக்கைகுறைந்திருந்தாலும், 3-வது அலைஎச்சரிக்கையைத் தொடர்ந்து, முகாம்களை நடத்தி விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியது.

தீபாவளிப் பண்டிகை

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்றின் 3-வது அலை தொடங்குமென கணிக்கப்பட்ட செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தொடங்கவில்லை. தற்போது, தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி நவம்பர் மாதத்தில் தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இங்கிலாந்தில் தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சிங்கப்பூரிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 70 சதவீதம் அளவுக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்திவிட்டால் 3-வது அலை பாதிப்பை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 கோடி பேரில் 68 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்70 சதவீத இலக்கு எட்டப்பட்டு விடும். 3-வது அலை இப்போது தொடங்குவதற்கு வாய்ப்பு குறை வாகவே உள்ளது.

அதேநேரம் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 3-வதுஅலை தொடங்க அதிக வாய்ப்புள்ளது. மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப் போல் முன்னதாகவே 3-வதுஅலை தொடங்கினாலும் தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. குழந்தைகளுக்கென தனியாக சிகிச்சை பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது. 2-வது அலையைப் போன்ற பாதிப்பு 3-வது அலையில் இருக்காது. எனவே, 3-வது அலையைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x