

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அண்டை நாடான வங்கதேசத்தில் துர்கா பூஜையில் ஈடுபட்டுவந்த இந்துக்கள் மீதும், இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. வங்கதேசத்தில், இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் குடியிருப்புகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் 2009–10க்கு பிறகு இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்துக்களின் கோயில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீதான|தொடர் தாக்குதலைக் கண்டித்தும், ஐநா சபை இதில் தலையிட வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டததில் வரும் 27-ம் தேதிபுதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.