Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

முறைகேடு புகாருக்கு ஆதாரம் கேட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி: இணையத்தில் வைரலாகும் அண்ணாமலை பதிவு

சென்னை

மின் கொள்முதல் தொடர்பான புகாருக்கு ஆதாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டு கெடுவிதிக்க, உடனடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வங்கிகளில் அரசுப் பொறியாளர்களின் கணக்குகளில் திடீரென தொகைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 18-ம் தேதி செய்தியாளர்களிடம், ‘‘தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று காலை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலையின் புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து, தடையில்லா மின்சாரத்தை வழங்க உத்தரவிட்டு, வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எந்த இடத்திலும் மின்தடை இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி மீது அவதூறு

கடந்த ஆட்சியில் 1,800 மெகா வாட் ஆக இருந்த சொந்த மின் உற்பத்தி, தற்போது 3,500 மெகா வாட் ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாள் சராசரி தேவையானது 320 மில்லியன் யூனிட் ஆகும். கடந்த செப்.24 முதல் அக். 19-ம் தேதி வரை நிலக்கரி பற்றாக்குறையால், சந்தையில் 397 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்தோம். இந்தக் காலத்தில் 6,200 மில்லியன் யூனிட் விநியோகித்துள்ளோம். இந்த 397 மில்லியன் யூனிட்டில் 65 மில்லியன் யூனிட் மட்டுமே ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது பீக் ஹவரில் நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய மட்டும் தான். இதேபோல் குஜராத்தில் 131 மில்லியன் யூனிட்களும், ஆந்திராவில் 52 மில்லியன் யூனிட்களும் ரூ.20-க்கு வாங்குகின்றனர். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நம்முடையது மிகவும் குறைவுதான். இதை அறியாமல் திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இதை ஏற்க முடியாது. மின் வாரியத்தில் முறைகேடு குறித்த ஆதாரம் இருந்தால் அவர் 24 மணிநேரத்தில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கெடு விதித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில வங்கிக் கணக்கு விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தத் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக பாக்கித் தொகையை அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ள நிலையில், இப்போது பல்வேறு அரசுப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல நபர்களின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.29.64 கோடி திடீரென சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது என்று வங்கிப் பரிவர்த்தனை விவரத்துடன் தெரிவித்துள்ளார்.

எங்கிருந்து வசூலிக்கப்பட்டது?

மேலும், ‘நாம் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மின்துறை அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அவர் வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ‘ஆலோசகர்’களுக்கு இந்த 4 பர்சென்ட் எங்கிருந்து வசூலிக்கப்பட்டது? எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பது நன்றாக தெரியும். இந்த வாரம் அனல் மின் நிலையம்; அடுத்த வாரம் சூரிய மின்சக்தி; அதற்கும் அடுத்த வாரம் இன்னொரு பெரியகம்பெனி’ என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரி வித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த ‘எக்செல்’ கையில் இருந்தும் அந்த தொகையையும் ரூ.29.99 கோடி என சரியாக எழுதத் தெரியாமல், 4 சதவீதம் கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி, திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிட வேண்டும். இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவருக்கு எதிராக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக கடுமையாக குற்றம்சாட்டி பேசும் வீடியோவை இணைத்துள்ளார். அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவர் இடையிலான இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x