Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று புதிய நீதிபதிகளாக பொறுப்பேற்ற (வலமிருந்து இடம்) ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4 பேர் நேற்று கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக் ஆகிய 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி இந்த 4 பேரும் நேற்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகளை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இந்த 4 பேருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆகவும், நீதிபதி ஸ்ரீமதி சுந்தரத்துடன் சேர்த்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆகவும் உயர்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம் நாகையநல்லூரைச் சேர்ந்த நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம், 1967-ல் பிறந்தவர். இவரது தந்தை என்.ஆர்.துரை, தாயார் சாரதா. கணவர் சுந்தரம் ஆடிட்டராக பதவி வகித்து வருகிறார். கணித ஆசிரியராக பணியாற்றிய இவரது தாத்தா ராமசாமி வகுத்துக் கொடுத்த பாடத்திட்டமே தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற மதி சுந்தரம், 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகிலுள்ள தென்னாத்தூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை டி.டி.தாஸ் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். தாயார் பத்மஜோதி. மனைவி யு.ஜெயப்பிரியா ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேராசிரியை. மகன் ஹேமந்த் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

நீதிபதி ஆர்.விஜயகுமார், 1970-ம் ஆண்டில் கோவையில் பிறந்தார். இவரது தந்தை ஏ.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தாயார் விமலாதேவி. மனைவி அம்பிகா. சாய்கார்த்தி என்ற மகன் உள்ளார். 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர். தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையம் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1972-ம் ஆண்டில் பிறந்தவரான நீதிபதி முகமது ஷபீக் சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர். தந்தை எஸ்.எம்.அப்துல்காதர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து கடந்த 26 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமிக்கவர். 2018 முதல் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x