110 தொகுதிகளை எப்படி பிரித்துக் கொள்வது?- ம.ந.கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

110 தொகுதிகளை எப்படி பிரித்துக் கொள்வது?- ம.ந.கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
Updated on
1 min read

மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளை எவ்வாறு பங்கிடுவது என்று அந்த அணியில் உள்ள 4 கட்சிகளின் தலைவர்களும் ஆலோசனை செய்தனர்.

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து புதிதாக விஜயகாந்த் அணியை உருவாக்கியுள்ளனர். தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக ம.ந.கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ம.ந.கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கான 110 தொகுதிகளை எப்படி பிரித்துக் கொள்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ம.ந.கூட்டணி தரப்பில் சில அமைப்புகளும், தேமுதிக தரப்பில் தமாகா, புதிய தமிழகம், கொமதேக போன்ற கட்சிகளும் பேசி வருகின்றன. எனவே, ம.ந.கூட்டணியின் 5-ம் கட்ட பிரச்சாரத்துக்குப் பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களில் பிரேமலதா பங்கேற்கிறார். அந்தக் கூட்டங்களில் ம.ந.கூட்டணி தலைவர்கள் யார், யார் பங்கேற்பது என்றும் ஆலோசிக்கப்பட்டது. ம.ந.கூட்டணியின் 5-ம் கட்ட பிரச்சாரப் பயணம் 28-ம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. அதில், தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் பங்கேற்கிறார். 29-ம் தேதி கோவில் பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்கிறார்.

இந்த பிரச்சாரப் பயணங்களை ஒருங்கிணைப் பது குறித்தும், ம.ந.கூட்டணியால் அமைக்கப் பட்டுள்ள தேர்தல் பணிக்குழுக்கள், தேமுதிக தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து செயல்பட மாவட்ட நிர்வாகிகளை அறிவுறுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in