Published : 12 Jun 2014 10:49 AM
Last Updated : 12 Jun 2014 10:49 AM

காவிரி டெல்டாவில் தூர்வாரப்படாத ஆறுகள்- தண்ணீர் வந்தாலும் வயல்களை சென்று சேருமா?

டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன மற்றும் வடிகால் ஆறுகளைத் தூர்வார கடந்த 3 ஆண்டுகளாக தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், அது முழுமையாக வயல்களுக்கு சென்று சேராது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டத் தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால், மிகக்குறைந்த எண்ணிக்கையில் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. 75 சதவீத விவசாயிகள் ஆற்றுப் பாசனம் மூலமாகவே சாகுபடியை மேற்கொள்கின்றனர்.

இந்த மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால் ஆகியவற்றை தூர் வார தமிழக அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரசாணை மூலம் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை…

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டு களாக தூர்வாரும் பணிகளுக்கென தனி நிதி ஒதுக்கீடு எதுவும் அரசால் செய்யப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்க ளில் உள்ள ஆறுகள், வாய்க்கால் கள், வடிகால்கள் அனைத்துமே செடி, கொடிகள், நெய்வேலி காட்டா மணக்கு செடிகள், ஆகாயத் தாமரை செடிகள் மண்டிக்கிடக்கின்றன. மணல் திட்டுகள் ஏராளமாக உள்ளன. கடந்த ஆண்டில் ஆறு களின் கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டும் அது கிளை வாய்க்கால்களை சென்று சேரவே இல்லை. பல இடங்களில் ஆறுகளின் நடுவே உள்ள மணல் திட்டுகள் ஆறுகளின் நீரோட்டத்தை தடுத்துவிட்டன.

ஜனவரியில் பணி தொடங்க வேண்டும்…

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

“தூர்வாரும் பணிகளுக்கு என தனி நிதி ஒதுக்கப்படாமல் நீரொழுங்கிகள், மதகுகள் உள் ளிட்டவை பழுதுபார்க்க ஒதுக்கப் படும் நிதியைக் கொண்டு தூர்வாரப்படுகிறது. இதனால் மதகுகள், ஷட்டர்கள் சீரமைக்கப் படாமல் உள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து ஜூலையில் தண்ணீர் திறக்கப் படும்போது, தண்ணீர் முழுமையாக வயல்களுக்கு சென்று சேரும் வகையில், டோசர் இயந்திரத்தை வைத்து ஆறுகளை சமன்படுத்தி நீரோட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். நிரந்தர அரசாணை மூலம் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலர் நெடுவை டி.ராஜதுரை கூறியது:

“தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செயல்படுத்தவில்லை. தூர்வாரும் பணியை மேட்டூர் அணை மூடி யிருக்கும் காலத்தில் மேற்கொள் ளப்பட வேண்டும். ஆனால், உரிய காலத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்வது இல்லை” என்றார்.

விவசாயிகளுக்கு ஊக்கமளிக் கும் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் தமிழக முதல்வர் , டெல்டா மாவட்டங்களில் சாகுபடி முழு அளவில் நடைபெறவும், ஆறுகளில் குறைந்த தண்ணீர் வந்தாலும் அவை வயல்களுக்கு சென்று பாய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர் பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x