Published : 20 Oct 2021 06:36 PM
Last Updated : 20 Oct 2021 06:36 PM

எந்த இடங்களிலும் மின் தடை இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது:  அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

சென்னை

எந்த இடங்களிலும் மின் தடைகள் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வரின் ஆணையின்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் இன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவசியமான மின்தளவாடப் பொருட்களான மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்கோபுரங்கள் மற்றும் இதர தளவாடவாடப் பொருட்களின் கையிருப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெருமழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விபத்தை தவிர்க்க மின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நிலைமை சீரடைந்தவுடன் உரிய களஆய்வு செய்து மின் விநியோகத்தை தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.

துணை மின் நிலையங்களில் மழைநீர் புகுவதை தடுக்க மணல் மூட்டைகள் மற்றும் தண்ணீரை வெளியேற்றும் மின்மோட்டார்களை தயார் நிலையில் வைக்கும்படியும், பெருமழை மற்றும் புயல் போன்றவற்றால் மின்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்ய தேவையான பணியாட்கள், உபகரணங்கள், ஜேசிபி, மற்றும் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாள்வதற்கும், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது எனவும், மின்கம்பங்கள் மற்றும் பில்லர் பெட்டிகள் அருகில் செல்லக்கூடாது எனவும் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகள் செய்து பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 93,881 மின்கம்பங்கள், 19,826 கி.மீ. மின்கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 1,500 கி.மீ. தாழ்வழுத்த புதைவடங்கள் மற்றும் 50 கி.மீ. உயரழுத்த புதைவடங்களும் கையிருப்பில் தயராக உள்ளது.

மின்கட்டமைப்பில் ஏற்படும் சேதங்களின் அளவை பொறுத்து மாநிலம் முழுவதிலும் இருந்து மின் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களை மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பருவமழை காலங்களில், எதிர்கொள்ளக்கூடிய வகையில் மின்சார வாரியம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகள் வழங்கி இருக்கின்றார், அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக, 93,881 மின் கம்பங்கள், 19,826 கி.மீ. மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15,600 கி.மீ தாழ்வழுத்த புதைவடங்கள், 50 கி.மீ அளவுக்கு உயரழுத்த புதைவடங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளன.

வரக்கூடிய பருவமழைக் காலங்களில் சீரான மின் விநியோகத்துக்குத் தேவையான அனைத்து முன் ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைச் கூட்டம் இப்போது நடைபெற்று இருக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன, குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அந்தந்த மாவட்ட அளவில் உயர் பதவியில் உள்ள மின் அலுவலர்கள் இடம் பெற்று இருப்பார்கள்.

முதல்வரின் உத்தரவின்படி மின் விநியோகம் எந்த வகையிலும் தடையின்றி சீரான மின் விநியோகத்தை வழங்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கியுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் இந்த ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்தடை ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்துத் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எந்த இடங்களிலும் மின் தடைகள் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

4,320 மெகவாட் வாரியத்தின் நிறுவுதிறன், இதில் கடந்த ஆட்சியில் 1,800 மெகவாட் அளவு தான் உற்பத்தி செய்தார்கள். முதல்வரின் அறிவுரைகளை பின்பற்றியதை தொடர்ந்து நம்முடைய சொந்த உற்பத்தி தற்போது 3,500 மெகாவாட் அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம்.

குறிப்பாக, நம்முடைய ஒரு நாள் சராசரி தேவை 320 மில்லியன் யூனிட் 24.09.2021 முதல் 19.10.2021 வரை நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாம் சந்தையில் கொள்முதல் செய்தது 397 மில்லியன் யூனிட் இந்த காலங்களில் 6,200 மில்லியன் யூனிட் விநியோகம் செய்திருக்கிறோம். இந்த 397 மில்லியன் யூனிட்டுகளில் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது 65 மில்லியன் யூனிட்தான் இது பீக் ஹவரில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தான். இது மொத்த தேவைகளில் 1 சதவிகிதம் தான் இதே போல் குஜராத்தில் 131 மில்லியன் யூனிட்டுகளும் ஆந்திராவில் 52 மில்லியன் யூனிட்டுகளும் 20 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்' என்று கூறினார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x