Published : 20 Oct 2021 04:58 PM
Last Updated : 20 Oct 2021 04:58 PM

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை குறைவு: மா.சுப்பிரமணியன் கவலை

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:

''உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறை மற்றும் மருத்துவத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் பொதுமக்கள் மத்தியில் கரோனா கால விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்கு முகக்கவசம் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. இங்கிலாந்தில் நேற்று 40 ஆயிரம் என்கிற அளவில் தொற்று உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் குறைந்து பிறகு கூடிக்கொண்டே செல்கிறது. எனவே உலக நாடுகள் எல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தக் காலத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை கடமையாகக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது, சோப்புப் போட்டு கைகளை நன்றாகக் கழுவுவது போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் 68 சதவிகிதம் இருக்கின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றாலும் இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 வயதைத் தாண்டியவர்கள் எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 5 கோடியே 70 லட்சம் அளவுக்கு உள்ளனர். உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி முதல் தவணை தடுப்பூசி 70 சதவிகிதத்தினர் செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளனர். தமிழகத்தில் 68 சதவிகிதம் செலுத்தியுள்ளோம். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுதான் கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் 2வது தவணை தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்திட வேண்டுமோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாமில் 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெறுகிற 6வது மாபெரும் தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று காலை வரை 48 லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சனிக்கிழமை பொதுமக்களின் வசதிக்காக 50 ஆயிரம் முகாம்கள் மூலம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. எனவே இம்முகாம்களில் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறோம்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x