

ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
உடுமலையில் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் படுகொலை செய்யப்பட்ட பொறியியல் மாணவர் சங்கருடைய சொந்த ஊரான குமரலிங்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, சங்கருடைய தந்தை மற்றும் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்று நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு போலீஸாரின் மெத்தனப் போக்கே காரணம். இதற்காக அரசு வழங்கும் இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும். அந்த அளவுக்கு ஆணவக் கொலைகளால் தலித் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.
இச்சம்பவத்தைக் கண்டித்து விரைவில் உடுமலையில் கண்டன ஊர்வலம் நடைபெறும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.