

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஆபரேட்டர், ஒப்பந்தத் தொழிலாளி ஆகிய 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சேந்தமங்கலம் மேல்பாகம் அருகேயுள்ள செல்லிவலசு இ.பி. காலனியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (32). குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்தத்தொழிலாளி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடு அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி அச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25). பொக்லைன் ஆபரேட்டர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சி தெற்குமந்தை தெரு அருகில் நேற்றிரவு (அக். 19ம் தேதி) குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் வீரக்குமார் மற்றும் அஜித்குமார் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெளிச்சத்திற்காக அப்பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுத்து போகஸ் மின் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
போதிய வெளிச்சம் இல்லாததால் பொக்லைன் ஆபரேட்டர் அஜித்குமார் போகஸ் விளக்கை வேற இடம் மாற்றி வைப்பதற்காக போகஸ் விளக்கு கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாயை தூக்கியப்போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய அஜித்குமார் தவறி குழிக்குள் விழுந்தப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வீரக்குமார் மீது விழுந்துள்ளார்.
இதில் இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.