

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது நடவடிக்கையின்போது போலீஸ் அதிகாரிகள் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாஜக பெண் நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைகருத்துகளை பதிவிடுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜகமாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை (55) கடந்த16-ம் தேதி நள்ளிரவு சென்னைவளசரவாக்கத்தில் உள்ள அவரதுவீட்டில் போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸார் அடக்குமுறையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்தபுகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த 16-ம் தேதி எங்கள்கட்சி பிரமுகர் கல்யாணராமனை கைது செய்யப் போவதாக செய்தி அறிந்து நானும், எங்கள் கட்சியை சார்ந்த சில நபர்களும் அங்கு சென்றோம். யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல், ‘எதற்காக கைது செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு வந்த இணைஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாகவெளியே வரமுடியாதபடி எங்களை அடைத்தனர். இணை ஆணையர் ஒருவர் என்னை பார்த்து மிகவும் தரக்குறைவாக பேசினார். தாக்குவதுபோல வந்து என் மீது கை வைத்து தள்ளினார்.
முன்னுதாரணமாக திகழ வேண்டிய காவல் இணை ஆணையர்அத்துமீறி நடந்துள்ளார். அதை உதவி ஆணையர் கலியன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.